
2023ஆம் ஆண்டிற்கான முதல் அரையாண்டு கூட்டம்
தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆயர் பேரவை அமர்வுக் கூட்டம்
ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு - பாண்டிச்சேரி மறைமாவட்ட ஆயர்களின் 2023 ஆண்டிற்கான முதல் அரையாண்டு கூட்டம், தூத்துக்குடி ஆயர் இல்லத்தில் இரண்டு நாள் அமர்வு, தமிழக ஆயர் பேரவைத் தலைவர் மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏறக்குறைய 22 ஆயர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
முதல்நாள் அமர்வில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, இறைவணக்கத்திற்கு பிறகு, வந்திருந்த அனைவரையும் தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி அவர்கள் வரவேற்று தூத்துக்குடி மறைமாவட்ட தொடக்க வரலாறு, தொன்மை சிறப்புகளை எடுத்துரைத்தார்.
அன்று மாலை, ஆயர் இல்லத்திலிருந்து, திருஇருதயங்களின் பேராலய வளாகத்தில் அனைத்து ஆயர்களும் பங்கேற்று ஆடம்பரத் திருப்பலி நிறைவேற்றினர். திருப்பலி நிறைவில் தூத்துக்குடி மறைமாவட்ட இறைமக்கள் சார்பாக, வரவேற்புக்கூட்டம் நடைபெற்றது. ஆயர்களுக்கு பொன்னாடைகள் போற்றப்பட்டு, நினைவு பரிசுகள் அளிக்கப்பட்டன. நாட்டிய கலை விருந்தும் நடைபெற்றது. தர்மபுரி ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் சிறப்புரையாற்றினார். மறைமாவட்ட நிர்வாகத்தந்தை S.M. சகாயம் அவர்கள் நன்றி கூறினார்.
திரளான இறைமக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்ட இக்கூட்ட ஏற்பாடுகளை (வட்டார அதிபர்) ஸ்டார்வின் (நற்செய்தி நடுவம்) சுந்தரிமைந்தன் (ஜேம்ஸ் விக்டர்) (மறைமாவட்ட நூற்றாண்டுவிழா பொறுப்பு) சிறப்பாக செய்திருந்தனர்.
இரண்டாம் நாள் ஆயர்கள் மட்டும் பங்கேற்ற ஆயர் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு பணிக்குழுக்களுக்கு புதிய செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஆயர் பேரவை துணைச் செயலர் அருள்முனைவர் டு. சகாயராஜ் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.
நூற்றாண்டு விழா நிறைவை நோக்கி பயணிக்கும் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் மாண்பினை போற்றும் விதமாக, இந்த ஆயர் பேரவை அமர்வுக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
Comment